எங்கெங்கு காணினும் சக்தியடா — பாரதி

மஹாகவியின் கூற்றுப்படி எங்கும் பரந்து பல்கியிருக்கும் அன்னை சக்தியை

நேரில் காண விருப்பமா? இது என்ன விளையாட்டு? ஆயிரமாயிரம் ஆண்டுகள் கடும் தவமிருந்தால் தானே அவளை தரிசிக்க முடியும் என்கிறீர்கள் இல்லையா?

அது தான் இல்லை, அவளை மிக எளிதாகக் காணலாம். பலர் அவளை வருடந்தோறும் கண்டு களிக்கின்றனர். உங்களுக்கும் அந்த அனுபவம் வேண்டுமா?

எதிர்வரும் பிப்ரவரி மாதம் மூன்றாவது வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கவிருக்கும் மாயூரம் ஸ்ரீ ராதாகல்யாண மஹோத்சவத்துக்கு வாருங்கள், அன்னபூர்ணா தேவியாய் அவளை தரிசிக்கலாம்! மூன்று நாட்களும் நான்கு வேளைகளிலும் நடைபெறும் பிரம்மாண்டமான அன்னதானத்தில் அவள் இருப்பாள். ஸ்ரீ ராதாகல்யாண மஹோத்சவக் கமிட்டி, சிறு மற்றும் பெருநிறுவனங்கள், பொதுமக்கள், மற்றும் தன்னார்வத் தொண்டர்களின் பெருமுயற்சியால் பாண்டுரங்கனுடன் இணைந்து தேவி அன்னரூபமாய் அருள் பாலிக்கிறாள்.

உணவு என்பது சாதாரணமான பொருள் அல்ல, உணவே உடலுக்கும் மனதுக்கும் தேவையான சக்தியைக் கொடுத்து நம்மைப் போஷிக்கிறது. எனவேதான் அன்னை பராசக்தியை இந்து மதம் உணவின் கடவுளாய்ப் போற்றுகிறது. சக்தி அன்னபூர்ணா தேவியானது எப்படி எனும் ஒரு சுவாரசியமான குட்டிக்கதை படிப்போம், வாருங்கள்.

ஒரு முறை கைலாயத்தில் ஈசனும் பார்வதியும் தாயம் விளையாடிக் கொண்டிருந்தனர். ஆட்டம் விறுவிறுப்பாகவே சிவன் பந்தயம் கட்டலாமெனக் கூற, சக்தி தன் நகைகளையும் சிவன் தன் திரிசூலத்தையும் பணயம் வைத்தனர். அன்று தேவியின் நாள் போலும்! சிவன் முதலாட்டத்திலேயே தோற்று தன் சூலத்தை இழந்தார். தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சே என்று விட்டிருக்கலாம். சிவன் விட்டாரா? இல்லை, நானாவது தோற்பதாவது, வா இன்னொரு ஆட்டம் என தன் சர்ப்பத்தைப் பணயம் வைத்தார். அன்று விளையாடியது விதியன்றோ? வலிய விதியின் விளையாட்டால், சர்ப்பத்தையும் தோற்க நேர்ந்து, அதை மீட்க மேலும் மேலும் தன் அனைத்துப் பொருட்களையும் சூதாடி இழந்தார்.

கடைசியில் எஞ்சியது அவருடைய பிக்ஷா பாத்திரம் மட்டுமே!!

அவமானத்தில் ஈசன் கைலாயத்தை விட்டு தேவதாரு காட்டுக்குச் செல்ல, நடந்ததையெல்லாம் பார்த்த திருமால் காட்டுக்குச் சென்று அவரை சந்திக்கிறார்.

"நீர் ஏன் அவமானப் படுகிறீர்? சென்று மீண்டும் விளையாடும், இழந்ததை மீட்பீர்" என ஆலோசனை சொல்ல, சிவன் திரும்ப கைலாயம் சென்று தேவியை தாயம் ஆட அழைக்கிறார். தேவி தன் வெற்றிப்பாதை தொடரும் எனும் எண்ணத்தோடே விளையாட ஒத்துக்கொள்கிறாள்.

ஆனால் நடந்ததோ எதிர்மாறாக! ஈசன் அனைத்து ஆட்டங்களையும் வென்று இழந்த அனைத்தையும் மீட்டுக் கொள்ள தேவிக்கு பலத்த சந்தேகம் எழுகிறது. அவள் ஈசனை நீர் ஏமாற்றி விட்டீர் என சாட, அவர் அதை மறுக்க இருவருக்கும் இடையே வாக்குவாதம் மூள்கிறது. இந்த சமயத்தையே எதிர்பார்த்து அங்கு வரும் திருமால் இந்த ஆட்டங்களின் காயை நகர்த்தியது நானே என்றும், நீங்கள் ஆடியதாக நினைப்பது மாயை என்றும் கூறினார்.

வாழ்க்கை என்பது தாயம் போன்ற ஆட்டமே: நிர்ணயிக்க முடியாததும், கட்டுப்படுத்த இயலாததுமே என்ற திசையில் அவர்களின் கலந்துரையாடல் செல்கிறது. சிவன் ஒருவரின் உடமைகள் நிரந்தரமானவை அல்ல, அனைத்தும் மாயையே என்றார். நாம் உண்ணும் உணவும் மாயையே என அவர் கூற, தேவி கோபம் கொண்டு அதை மறுத்தாள். உணவு மாயை எனில் உணவளிக்கும் நானும் மாயையே என்று பொருளாகிறது. நான் இல்லாவிடில் உலகம் எப்படி இயங்கும் எனப் பார்க்கிறேன் என சவால் விட்டு மறைந்து விட்டாள்.

சக்தியில்லையெனில் காலமாற்றம் ஏது? பயிர், பருவம் ஏது? பிறப்பும் வளர்ச்சியும் தான் ஏது? உலகமே ஸ்தம்பிக்க, எங்கும் பசி, பட்டினி, பஞ்சம் தலை விரித்தாடியது. மானுடர்கள், தேவர்கள், அசுரர்கள் பாகுபாடின்றி பராசக்தியை உணவு வேண்டி பிரார்த்தித்தனர். தன் குழந்தைகள் அனைவரும் பசியால் வாடிடும் இன்னலைக் காண சகிக்கவில்லை அவளுக்கு. அன்னையல்லவா, பிள்ளைகளை கைவிடுவாளோ! மனம் இளகி வாரணாசியில் தோன்றி அனைவருக்கும் உணவு வழங்கினாள்.

சக்தியில்லாமல் இவ்வுலகில்லை, தானும் இல்லையென உணர்ந்த சிவன் தன் பிஷா பாத்திரத்துடன் தேவி முன் தோன்றி அவள் கையால் உணவு வாங்கி உண்டார்.

தேவி, உணவு உடலை மட்டுமல்ல, ஆத்மாவையும் பேணிக் காக்கிறது. எனவே, அது மாயை அல்ல என நாமும் உலகத்தாரும் உணர்ந்தோம். நீ அனைத்து உயிர்களுக்கும் உணவளிக்கும் அன்னபூரணி. உலகத்தார் உணவின் பெருமையையும், அவசியதையும் உணர்ந்து அதற்கு சிறந்த மதிப்பளித்து வாழ்வாராக என உரைத்து அன்னத்தின் மஹிமையை அனைவருக்கும் உணர்த்தினார்.

இப்படிப்பட்ட மஹோன்னதமான உணவை மாயூரம் ஸ்ரீ ராதாகல்யாண உத்சவம் நடைபெறும் மூன்று நாட்களிலும், நான்கு வேளைகளிலும் வருவோர் அனைவருக்கும் எந்தப் பாகுபாடுமின்றி அளிக்கும் இடத்தில் அன்னபூரணி விருப்பத்துடன் எழுந்தருளி இருப்பாளென நாம் முன்பு கூறியதில் ஐயமும் உண்டோ?

பக்தகோடிகளான நாம் அனைவரும் இந்த வைபவத்தில் பங்கு கொண்டு, ஔவைப் பிராட்டியின் "அறம் செய்ய விரும்பு" மற்றும் "ஐயமிட்டு உண்" (ஐ = தெய்வம்) கூற்றுகளின்படி விரும்பி நம்மாலான அறத்தைப் பொருளாகவோ, தொகையாகவோ செய்து, பாண்டுரங்கனுக்கு உணவு சமர்ப்பித்து, அவன் பக்தகோடிகள் மற்றும் அனைத்து விருந்தினருடனும் பகிர்ந்து உண்டு அவன் நாமசங்கீர்த்தனத்தில் திளைத்து நற்கதி அடைவோமாக!

Share this: