நோக்குவீர் அன்றாட வாழ்க்கைக்கு அப்பால்

'செவிக்குணவில்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்' என்னும் வள்ளுவர் வாக்கையே பொய்யாக்கியது மாயூரம் ராதாகல்யாண மஹோத்சவம் என்றால் அது மிகையல்ல. செவிக்கு அமுதாக நாமசங்கீர்த்தனம் இடைவிடாது கிடைத்துக் கொண்டிருக்கும் போதும் அன்னபூர்ணா தேவியின் அருளோடு மூன்று நாட்களும் நான்கு வேளைகளிலும் வயிற்றுக்கும் அமுது அளவில்லா உபசரிப்புடன் கிடைக்கும் அற்புத இடம் மாயூரம் ராதாகல்யாணம்.

சோறு கண்ட இடமே சொர்க்கமன்றோ? ஏனெனில் அன்றாட வாழ்க்கையில் உணவு தயாரித்தலும், அதற்கான பண ஈட்டுதலுமே நம் நேரத்தை ஆள்கின்றன. இந்த ராதாகல்யாண மஹோத்சவம் நம் நேரத்தை அதிலிருந்து விடுவித்து, அதையும் செவ்வனே செலவிட நாமசங்கீர்த்தனத்தையும் அளிக்கிறது. பாண்டுரங்கன் இருக்கும் இடமே பரமபதமன்றோ?

கடமைகளை முடித்துவிட்டு, வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பின் இந்த பக்தி, பஜனையில் எல்லாம் ஈடுபடலாம் என நினைப்பர் ஒரு சாரார். 'இளமையில் கல்' என்பதல்லவோ அவ்வை வாக்கு! இளமைக்காலத்தில் நெறிமுறைகளைக் கற்று காலத்தை வீணடிக்காமல் சிறப்பாக வாழ்வதன்றோ பயனுள்ள வாழ்க்கை? பசுமரத்தாணியில் பகவன் நாமாவை பாய்ச்சவில்லை எனில் வயது முதிர்ந்த பின் திடீரென மனம் லயிக்குமோ? கடலில் அலை ஓய்வது எப்போது, ஸ்னானம் செய்வது எப்போது என சிந்தியுங்கள். நாமசங்கீர்த்தன சமுத்திரத்தில் மூழ்கி பரமன் என்னும் முத்தெடுக்க சரியான தருணமும் வேண்டுமோ?

நாமஸ்மரணத்தின் பெருமையை நாராயணனே நாரதர் மூலம் நமக்கு தெரிவித்த கதை நீவீர் அறிவீரா? ஒரு சமயம் நாரதர் நாராயணனிடம் நாங்கள் ஏன் உன் நாமாவை உச்சரிக்க வேண்டும் எனக் கேட்க நாராயணன் புன்முறுவலோடு நீர் பூமிக்குச் சென்று அங்கு இருக்கும் ஒரு குறிப்பிட்ட புழுவின் காதில் என் பெயரைக் கூறும் என மொழிய, நாரதரும் அவ்வாறே சென்று புழுவின் காதுகளில் ஓத, அந்தோ பரிதாபம் அந்தப் புழு நாராயண நாமம் கேட்ட மாத்திரத்தில் செத்து மடிந்தது! நாரதர் நாராயணரிடம் திரும்பி வந்து நடந்ததைக் கூற, நாராயணனோ நாரதரே, நீர் இப்போது போய் ஒரு குறிப்பிட்ட பட்டாம்பூச்சியிடம் என் பெயரைக் கூறும் என அனுப்பினார். நாரதரும் அவ்வாறே செய்ய, நாராயணன் பெயர் கேட்ட பட்டாம்பூச்சியும் உடனே உயிரை விட்டது. பதறிப் போன நாரத முனி ஓடோடியும் வந்து இதை நாராயணனிடம் உரைக்க, அவரோ சற்றும் புன்முறுவல் மாறாது இப்போது நீர் போய் அந்த காட்டில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட மானிடம் என் பெயர் கூறும் எனச் சொல்ல, நாரதர் மிகுந்த பயத்துடனே சென்று மானின் காதில் உரைக்க, அவர் எதிர்பார்த்த மாதிரியே மானும் மடிந்தது. அவர் தாங்கொணாத் துன்பத்துடன் நாராயணா என ஓடி வந்து விஷயத்தைச் சொல்ல, நாராயணரோ இந்த முறை ஒரு பசுவின் காதில் கூறுமாறு பணிக்க, நாமத்தைக் கேட்ட பசுவும் உயிரை விட, நடுநடுங்கிய நாரதர் நாராயணனிடம் வந்து விவரம் கூற நாராயணரோ அசராமல் நாரதரே, காசி ராஜாவுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளான், காசிக்குச் சென்று அந்த குழந்தையில் காதில் என் நாமத்தை ஓதுவீர் என்றார். நாரதரோ, நாராயணா, இத்தனை நாள் என்னை மக்கள் கலகக்காரன் என்றே கூறி வந்தனர், இனி கொலைகாரன் என்றும் கூறப் போகின்றனர் என வருத்தப் பட நாராயணன் சிரித்துக் கொண்டே வருத்தப் படாதேயும், சென்று நான் சொல்வதைச் செய்யும் எனக் கூறினார்.

காசிக்குச் சென்ற நாரதரை அரசன் மிகச் சிறப்பாக வரவேற்று தமக்குத் தவமாய் தவமிருந்து பிள்ளை பிறந்துள்ளதாகவும், நாரதர் அந்தக் குழந்தையை ஆசீர்வதிக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்ள, நாரதர் மனம் முழுவதும் கிலியுடன் குழந்தையின் காதில் நாராயண நாமத்தை உரைக்கிறார். என்ன அதிசயம், அந்தக் குழந்தை வாயைத் திறந்து பேசத் துவங்குகிறது! நாரதரைப் பார்த்து, ஓ முனிவரே, நாராயண நாமத்தின் சக்தியை நீர் அறியீரோ? நீர் கூறிய நாராயண நாமத்தைக் கேட்டு, புழுவாயிருந்த நான் பட்டாம்பூச்சியாய்ப் பிறவி எடுத்தேன், பிறகு அதற்கும் மேற்பிறவிகளான மானாகவும், பசுவாகவும் பிறந்தேன். இப்போது கிடைத்தற்கரிய மானுடப் பிறவி எடுத்து அவனுக்குத் தொண்டு செய்து நற்கதி அடையும் சந்தர்ப்பமும் கிடைக்கப் பெற்றேன் எனக்கூறவும் நாரதருக்கு நாராயண நாமத்தின் மஹிமை விளங்கிற்றாம். நமக்கும் விளங்கியதன்றோ?

ஒரு சாரார் கடமைகளில் மூழ்க விழைய மறு சாராரோ எங்களுக்கு பாடவோ ஆடவோ தெரியாதே, எங்களுக்கு இந்த நாமசங்கீர்த்தனம் செய்யுமளவு ஞானம் இல்லையே என ஐயம் கொள்ளுவர். அவருக்கு நாம் சொல்லும் மிக எளிய வழி இதுவே:" ராமா ராமா ராமா என்று நாமம் சொல்லிப் பாடணும், நாமம் சொல்ல வராவிட்டால் நல்லவரோடு சேரணும்; க்ருஷ்ணா க்ருஷ்ணா க்ருஷ்ணா  என்று கையைத் தட்டிப் பாடணும், கையைத் தட்ட வராவிட்டால் கண்ணை மூடிக் கேட்கணும்". இதற்கு வழிவகை செய்வது மாயூரம் ராதாகல்யாண வைபோகத்திற்கு வருகை தருவதுவே.

சரி, வருகிறோம். நாமசங்கீர்த்தனமும் செய்கிறோம். ஆனால் இந்த மூன்று நாட்கள் மட்டும் போதுமா நற்கதி அடைய என்போரும் உண்டு. கலியுகத்தில் முக்திக்கு எளிய வழி நாமசங்கீர்த்தனமே என்பது தெளிவு. அவன் நாமத்தை உச்சரித்துப் பாருங்கள், உச்சரிக்க உச்சரிக்க உங்கள் காதுகள் அதை கேட்கத் துவங்கும். பிறகு மனம் கவனம் கொள்ளும். கவனம் அதிகமாக நாமாவில் மனம் லயிக்கத் தொடங்கும். மனம் அமைதி பெறும், அமைதியான மனத்தில் ஆனந்தம் பிறக்கும். ஆனந்ததில் தொடங்கி, தொடர்ந்து பேரானந்ததை நோக்கி இயல்பாக விழையும், அந்த விழைவின் விளைவு உய்வு என்னும் முக்தியே. இந்த சிறப்பான பேரானந்ததை அடையும் முதல் படியே மாயூரம் ராதாகல்யாணம் என்னும் அளப்பரிய சந்தர்ப்பம். அதை நழுவ விடாது, வேத ஸாஸ்த்ராணி விக்யானம் ஏதத் சர்வம் ஜனார்தனாத்' என்று எங்கும் எதிலும் பரந்திருக்கும் பரமனை பாண்டுரங்கனாய் கண்டு களித்து உய்வடைக!

Share this: